×

சலூன் கடைக்காரர் குத்திக்கொலை இந்து முன்னணி நிர்வாகி கைது: கோவையில் நள்ளிரவில் பயங்கரம்

கோவை: கோவையில் நள்ளிரவில் சலூன் கடைக்காரர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் இந்து முன்னணி பிரமுகர் உட்பட 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் புதூரை சேர்ந்தவர் சசிக்குமார்(35). இவர் அங்கு சலூன் கடை நடத்தி வந்தார். மேலும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில், சசிக்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி நகர துணைத்தலைவர் ராம் என்பவருக்கும் இடையே பணம், கொடுக்கல் வாங்கலில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. சசிக்குமாரின் மனைவி சில நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று சசிக்குமார், அவரது தாய் ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 12 மணியளவில் கதவை தட்டும் சத்தம் கேட்டது. எழுந்து வந்து கதவை திறந்த சசிக்குமாரை வெளியே நின்றிருந்த ராம் உள்ளிட்ட 2 பேர் உன்னிடம் பேச வேண்டும் என கூறி வீட்டில் இருந்து சில மீட்டர் தொலைவில் கூட்டி சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த சசிக்குமாரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினர். இதில் சசிக்குமாருக்கு கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சசிக்குமாரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல் வாங்கலில் இந்த கொலையை ராம், அவரது நண்பர் இளங்கோ ஆகியோர் செய்தது தெரியவந்தது. முன்கூட்டியே திட்டமிட்டு கொலை சம்பவம் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் இந்து முன்னணி நகர துணைத்தலைவர் ராம்(30), இளங்கோ(29) ஆகிய இருவரை கைது செய்தனர். கோவையில் நள்ளிரவில் ஏற்பட்ட இந்த கொலை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

The post சலூன் கடைக்காரர் குத்திக்கொலை இந்து முன்னணி நிர்வாகி கைது: கோவையில் நள்ளிரவில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Hindu Front ,Coimbatore ,
× RELATED போலீஸ் பாதுகாப்புக்காக பொய் புகார் இந்து முன்னணி பிரமுகர் கைது